இலங்கை படையினர் நடத்தி முடித்த தமிழ் இனப் படுகொலையில் அரங்கேற்றப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இந்தியா உள்ளிட்ட 22 நாடுகள் எதிராக வாக்களித்து இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்தியுள்ளன.
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற சிறப்பு மாநாட்டில் இலங்கை அரசால் நடத்தப்பட்ட தமிழ் இனப் படுகொலையில் அரங்கேறிய மனித உரிமை மீறுல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் சுவிற்சர்லாந்து அரசாங்கம் முன்வைத்திருந்தது.
தொடக்கம் முதலே இந்த கோரிக்கைக்கு எதிராக இந்தியா தலைமையிலான ஆசிய நாடுகள் செயற்பட்டு வந்தன.
இதனால், இந்த கோரிக்கை குறித்து பல்வேறு கருத்து முரண்பாடுகள் எழுந்ததால் கோரிக்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்திய பின்னர் அது நேற்று புதன்கிழமை மாலையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.
இந்த கோரிக்கைக்கு ஆதரவாக இரோப்பிய நாடுகள் வாக்களித்தன. குறிப்பாக சுவிற்சர்லாந்து, ஜேர்மனி, பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி, கனடா, சிலி, மெக்சிக்கோ உள்ளிட்ட நாடுகள் வாக்களித்தன.
இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, இந்தோனேசியா, கியூபா, ரஸ்யா மற்றும் ஆபிரிக்க நாடுகளும் இந்த கோரிக்கைக்கு எதிராக வாக்களித்தன.
எட்டு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்வதை தவிர்த்தன.
வாக்கெடுப்பின் முடிவில் கோரிக்கைக்கு ஆதரவாக 17 நாடுகளும் எதிராக 22 நாடுகளும் வாக்களித்திருந்ததால் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான இந்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாமல் அது தோல்வியடைந்துள்ளது.
இதேவேளையில் இதே கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கமும் தனது ஆதரவு நாடுகளின் ஆசியுடன் அனைத்துலக நாடுகளிடம் நிதியுதவி கோரும் கோரிக்கை ஒன்றையும் முன்வைத்தது.
இந்த கோரிக்கை மீதான விவாதமும் நேற்று இடம்பெற்றது.
இலங்கை அரசாங்கத்திற்கு நிதியுதவி வழங்கும் இந்த கோரிக்கைக்கும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளும் ஆபிரிக்க நாடுகளும் ஆதரவாக வாக்களித்தன. ஐரோப்பிய நாடுகள் நிதியுதவி வழங்குவதற்கு எதிராக வாக்களித்தன.
எனினும் வாக்கெடுப்பின் நிறைவில் இலங்கையின் நிதியுதவி கோரும் கோரிக்கைக்கு ஆதரவாக 29 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்திருந்தன. எட்டு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
இதனால் இலங்கை முன்வைத்த கோரிக்கை தீர்மானம் ஆக்கப்பட்டு நிதியுதவி வழங்குவது என முடிவாகியுள்ளது.
இதனிடையே, இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள 41 முகாம்களில் மூன்று லட்சம் மக்கள் வசிப்பதால் பாரிய இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் பிரதிநிதி கவலை வெளியிட்டுள்ளார்.
மக்களின் தரத்தை அரசு பேண வேண்டும் எனவும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் எனவும் நாம் இலங்கை அரசாங்கத்தினை கேட்டுக்கொள்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
Thursday, 28 May 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment