Sunday, 24 May 2009

"தமிழினம் அழிந்து கொண்டிருக்க, டில்லியில் பதவி பேரம் பேசுகிறார் ஒரு தமிழினத் தலைவர்": 'தினமணி' சாடல்


தமிழினம் அழிந்து கொண்டிருக்க, டில்லியில் பதவி பேரம் பேசுகிறார் ஒரு தமிழினத் தலைவர்" என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் பிரபல நாளேடான 'தினமணி' சாடியுள்ளது.
இது தொடர்பாக நேற்று சனிக்கிழமை வெளிவந்த 'தினமணி' ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"மத்தியில் புதிய அமைச்சரவை அமையும்போதெல்லாம் இந்தியா முழுவதும் தமிழகத்தைக் கூர்ந்து பார்க்க நேர்வது வழக்கமாகிவிட்டது.

2004 ஆம் ஆண்டு, காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த திமுக கேட்ட அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்படவில்லை என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, முன்னதாகவே காங்கிரஸ் அளித்த உறுதிமொழிப் பத்திரத்தைக் காட்டி எல்லோரையும் பிரமிக்க வைத்தார் திமுக தலைவர் மு.கருணாநிதி.

இப்போதும் அதேபோன்று அமைச்சர் பதவி கேட்பதில் கருத்து வேறுபாடு கொண்டு, அதை ஒருநாள் முழுவதும் ஊடகங்கள் பெரிதாகப் பேசிமுடித்த பிறகு, டில்லியை விட்டுப் புறப்பட்டு வந்துவிட்டார் தமிழக முதல்வர்.



பல்வேறு கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவை தாமாகவே அளித்துள்ள நிலையில், ஆட்சி நடத்தத் தேவையான எண்ணிக்கை பலம் காங்கிரசிடம் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி கொடுப்பதை ஏற்றுக்கொள்வது அல்லது வெளியிலிருந்து ஆதரிப்பது என்பதைத் தவிர திமுகவுக்கு வேறு வழி கிடையாது. காங்கிரசுடன் உறவை முறித்துக்கொண்டால் மத்திய அரசுக்கு எந்த இழப்பும் இல்லை. மாறாக, தமிழகத்தில் பெரும்பான்மை இல்லாத திமுக அரசுக்குத்தான் இழப்பு.

எண்ணிக்கை பலத்தால் மட்டுமே தற்போது திமுகவின் கோரிக்கையை காங்கிரஸ் மறுக்கிறது எனச் சொல்வதற்கில்லை. சென்ற ஆட்சிக் காலத்தில் கூட்டணிக் கட்சிகளால் காங்கிரஸ் கட்சி சந்திக்க நேர்ந்த தர்மசங்கடங்கள் ஏராளம். அதில் முக்கியமான இரண்டு நிகழ்வுகள் திமுக அமைச்சர்களால் நேர்ந்தவை.



முதலாவதாக, சேது சமுத்திரத் திட்டத்தில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சரான டி.ஆர். பாலு காட்டிய அவசரம். இதனால் தமிழக அரசே ஒரு நாள் வேலைநிறுத்தம் அறிவித்து, அதை அடையாள உண்ணாவிரதமாக மாற்றியது. சேது சமுத்திரத் திட்டச் செலவும், அதன்பிறகு கிடைக்கும் குறைந்த வருவாயும், கால்வாயைத் தொடர்ந்து தூர்வாரும் பணிக்கான தொடர் செலவினமும், பவளப்பாறை அழிவு மற்றும் ராமர் பாலம் சிதைவு என எல்லா பிரச்னைகளும் சேர்ந்து கொண்டதால்தான் இத்திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் கொஞ்சம் தாமதப்படுத்த நேர்ந்தது.

ஆனால், மத்திய அரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது திமுக. அடுத்தது ரூ. 60,000 கோடி 'ஸ்பெக்ட்ரம்' முறைகேட்டில் அமைச்சர் ராசா மீதான புகார். ஆகவே, கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தகைய அமைச்சர் பதவி அளிக்கவேண்டும் என்பதில் காங்கிரஸ் அதிக கறாராக இருப்பதைக் குறையாகச் சொல்லமுடியாது.

கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கும்போது, திமுக கேட்பதைக் கொடுத்து சமாதானம் செய்துகொள்ளும் முடிவைத்தான் பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் மேற்கொண்டுள்ளனர். ஆட்சியை அமைக்கும்போது நிலையற்ற தன்மையை விரும்பமாட்டார்கள். உத்தரப் பிரதேசம் போல தமிழ்நாட்டிலும் காங்கிரசும் சுய பலத்துடன் வளர்க்கத் தமிழக காங்கிரசார் விரும்பினாலும் அவர்கள் தன்மானத்துடன் செயல்படுவதைக் காங்கிரஸ் தலைமை விரும்பாது.

தற்போது திமுக எத்தனை அமைச்சர் பதவிகளைக் கேட்டது, எத்தனை பெற்றது, அல்லது பெற்றுக்கொள்ள மறுத்தது என்பது முக்கியமே அல்ல. அதற்கான நேரம் இதுவா? என்பதுதான் முக்கியமான கேள்வி.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 'மறைவு'க்குப் பின், ஈழத் தமிழர்கள் 2.8 லட்சம் பேர் கதியற்று, காப்பான் இன்றி, கவலையிலும் பீதியிலும் பட்டினியாலும் நொந்து கிடக்கும்போது, அவர்களது வாழ்வு மற்றும் பாதுகாப்புக்குத் தமிழர் குழுக்களை அனுப்ப வேண்டிய அவசியம் இருக்கும்போது, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை அனுப்பி தமிழர்கள் கெளரவமாக நடத்தப்படுகிறார்களா; நிவாரணம் முழுவதுமாக கிடைக்கிறதா என்று கண்காணிப்புக் குழுக்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டிய தமிழக முதல்வர், டில்லியில் அமைச்சர் பதவிக்காக பேரம் பேசிக் கொண்டிருந்தால்.... இது தகுமோ, இது முறையோ, இது தருமம் தானோ!

உலக நாடுகளும், ஐ.நா. சபையும் தமிழருக்கு உதவிட இராணுவத்தின் கட்டுப்பாடு பெரும் தடையாக இருக்கிறது என்றும், கட்டுப்பாடுகளை நீக்கினால்தான் மறுவாழ்வுப் பணிகளைத் தொடங்க முடியும், உதவிகள் வழங்க முடியும் என்றும் வலியுறுத்திக் கொண்டிருக்கையில், தமிழக அரசின் செயல்பாடு என்ன?

ரோம் நகரம் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று ஒரு சொல்லடை உண்டு. தென்னிலங்கையில் தமிழினம் அழிந்து கொண்டிருக்க, தில்லியில் பதவி பேரம் பேசினார் ஒரு தமிழினத் தலைவர் என்ற பேச்சு வரலாற்றில் இடம்பெறுவது சரியா?

இன்னின்ன அமைச்சர் பதவி வேண்டும் என்று குறிப்பிட்டுக் கேட்கும் திமுக தலைவர் கருணாநிதி, சூழ்நிலை அவசியம் கருதி, ஈழத் தமிழர் நலன் மற்றும் நிவாரணப் பணிகளைக் கண்காணிக்கவும் அங்கே அரசியல் தீர்வும் அதிகாரப் பகிர்வும் நியாயமாகவும் முறையாகவும் நடைபெறவும் ஒரு அமைச்சர் பதவியை திமுகவுக்கு ஒதுக்கக் கோரியிருந்தாலும்கூட, அதற்காக அவரைப் பாராட்டலாம். ஆனால் நிலைமை அதுவாக இல்லை.



திமுக தலைவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், இப்பிரச்னைக்குத் தீர்வு காண அவர் வந்தால் மகிழ்ச்சியுடன் வரவேற்பேன் என்றும் இலங்கை அதிபர் ராஜபக்ச முன்பு சொன்னதனால், இப்போது தமிழக முதல்வர் கருணாநிதி பயணப்பட்டிருக்க வேண்டிய இடம் கொழும்புதானே தவிர, டில்லி அல்ல.

திசை மாறிப் பறக்கிறது திமுகவின் தமிழ் இன உணர்வு!" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment